Tamil Cinema | Kollywood | Tamil Movies

உண்ணாவிரதத்தில் அரசியல் இல்லை : விஜய் பேட்டி
[ Monday, 17 November 2008, 02:40.01 AM GMT +05:30 ][ சினி சவுத் ] 

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ரசிகர் மன்றம் சார்பில் நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தின் பின்னணியில் எவ்வித அரசியல் நோக்கமும் இல்லை என விஜய் கூறியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 37 இடங்களில் விஜய் ரசிகர்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தார்கள். சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில், விஜய் கலந்து கொண்டு ரசிகர்களுடன் உண்ணாவிரதம் இருந்தார். இதற்காக சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் பந்தல்கள் போடப்பட்டிருந்தன. 'புத்தர் கடவுளாக உள்ள நாட்டில் யுத்தம் நிற்க உண்ணாவிரத போராட்டம்' என்று எழுதப்பட்ட பேனர்கள் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது, அதைப்பார்த்து பெண்கள் கதறி அழுவது போன்ற படங்களும் வைக்கப்பட்டிருந்தன.

காலை 7 மணிக்கே ரசிகர்கள் அங்கு திரள ஆரம்பித்தார்கள். கோவை, புதுச்சேரி மற்றும் சென்னையை சேர்ந்த ரசிகர்கள் விஜய் நற்பணி இயக்க கொடிகளை பிடித்தபடி, ஊர்வலமாக வந்தார்கள். பெரும்பாலான ரசிகர்கள் கறுப்பு உடை அணிந்திருந்தார்கள். காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. விஜய் கறுப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார். அவருடைய தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர், தாயார் ஷோபா சந்திரசேகரன், மனைவி சங்கீதா ஆகியோரும் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டார்கள்.

உண்ணாவிரதத்தின்போது நிருபர்களிடம் பேசிய விஜய் கூறியதாவது :- "தமிழ்நாடு முழுவதும் என் ரசிகர்கள் 37 இடங்களில் உண்ணாவிரதம் இருப்பதாக கேள்விப்பட்டேன். இதில் என் முயற்சி எதுவும் இல்லை. ரசிகர்கள் எடுத்த முடிவு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நம் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று என்னிடம் கேட்டார்கள். அதற்கு சம்மதித்து, நானும் அவர்களுடன் உண்ணாவிரதம் இருக்கிறேன்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் எந்த அரசியலும் இல்லை. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக எங்கள் உணர்வை தெரிவிக்கும் போராட்டம் இது. இலங்கையில் நடைபெறும் போர் முடிவுக்கு வரவேண்டும் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்படவேண்டும். இதற்காக நாம் அங்கே போய் சண்டை போட முடியாது, இது போன்ற உண்ணாவிரத போராட்டம் மூலம் நம் உணர்வுகளை காட்ட முடியும்" இவ்வாறு விஜய் கூறினார்.  

முன்செல்ல