Tamil Cinema | Kollywood | Tamil Movies

"ஐந்தாம்படை" சிம்ரன் சீக்ரெட்

இன்னும் மூன்று வாரத்தில் வெளியாக தயாராகிவிட்டது. 'ஐந்தாம்படை'. கிரி, ரெண்டு படங்களுக்குப் பிறகு குஷ்புவின் அவ்னி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் மூன்றாவது படம் இது. 'வீராப்பு' மூலம் இயக்குனராக அறிமுகமான பத்ரிதான் ஐந்தாம்படையையும் உருவாக்கியுள்ளார். சுந்தர் சி. இதுவரை நடித்த படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படமாக உருவாகிவரும் இப்படத்தின் கதைக்களம் திருநெல்வேலி.

படத்தின் கதை பற்றி இயக்குனர் பத்ரி கூறியதாவது :-

"ஐந்து சகோரர்களைப் பற்றிய கதை இது. அதனால்தான் 'ஐந்தாம்படை' என்ற பெயரை சூட்டியிருக்கிறோம். இதுவரை எத்தனையோ அண்ணன் தம்பி கதைகளை பார்த்திருக்கிறோம். ஆனால், இந்தப் படம் மற்ற அண்ணன் தம்பி கதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். அண்ணன் தம்பி கதையாக இருந்தாலும், இரண்டு குடும்பங்களுக்கு இடையில் பல வருடங்களாக நீடிக்கும் தீராத பகையும், அதை மேலும் ஊதிவிடுவது போல் இரு குடும்பத்து பெண்களின் வன்மமும் இணையாக சொல்லப்பட்டிருக்கிறது. இரு குடும்பத்தின் பகையையும் ஹீரோ ஒருவரால்தான் தீர்த்து வைக்க முடியும் என்பதும் அதற்கான காரணங்களும்தான் இந்தப் படத்தின் முக்கியமான முடிச்சு".


தியேட்டர் உரிமையாளராக நடிக்கிறார் சுந்தர் சி. கதாநாயகி அதிதிக்கு அக்ரஹாரத்து பெண் வேடம். வில்லன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக சிம்ரனும், ஹீரோவின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக தேவயானியும் நடிக்கின்றனர். ஹீரோவின் தூரத்து சொந்தம் என்று அந்த வீட்டிலேயே செட்டிலாகிவிட்ட தாந்தோணி என்ற வேடத்தில் நடித்திருக்கிறார் விவேக். 'டோண்ட் வொர்ரி பி ஹேப்பி' என்று அடிக்கடி இவர் பேசும் வசனங்கள், படம் வெளிவந்தால் மிகப்பெரிய அளவில் பேசப்படும், குறிப்பாக குழந்தைகளின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெறுவது உறுதி.

பல வருடங்களுக்கு முன் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஒலித்த 'ஓரம்போ ருக்குமணி வண்டி வருது....' என்ற பாடல் இப்படத்தில் இமானின் இசையில் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறது. ஓரம்போ பாடலை எழுதிய கங்கை அமரனே இப்படத்திலும் அந்தப் பாடலை எழுதியுள்ளார்". என்றவரிடம் சிம்ரன் வில்லியாக நடிக்கிறாராமே? என்றால், "அதுமட்டும் சீக்ரெட். இதுவரை அவர் ஏற்றிராத வேடம் என்பது மட்டும் இப்போதைக்கு சொல்ல முடியும்" என ரகசியம் காக்கிறார்.