Tamil Cinema | Kollywood | Tamil Movies

சீரியஸ் ரஜினி... திரும்பி வந்த சௌந்தர்யா
[ Tuesday, 11 November 2008, 02:15.14 PM GMT +05:30 ][ தமிழ் சினிமா ]

எந்திரனுக்கு நடுவில் இன்னொரு படம். இதுதான் ரஜினியின் இப்போதைய எண்ணமாக இருக்கிறது. இந்த இரண்டு வரி மேட்டரை காதருகில் சொல்லிவிட்டு நடையை கட்டினார் கோலிவுட் கோவிந்து. அட, அப்படியா? என்ற கோணத்தில் நமது விசாரணையை முடுக்கினோம். வந்து விழுந்த தகவல்கள் பரபர... சிவாஜி, குசேலன் படங்களில் ஏழைகளுக்கு வசப்படாத கேரக்டரில் நடித்த ரஜினி, சற்றே குழம்பிப் போய் இருக்கிறாராம். முத்து, அண்ணாமலை, பாட்ஷா மாதிரி சராசரி தொழிலாளியாக நடிப்பதுதான் ரசிகர்களுக்கும், தனக்குமான ஒட்டுதலை பலப்படுத்தும். அதை விட்டு விட்டு பணக்காரராகவும், ரசிகர்கள் எளிதில் நெருங்க முடியாத சூப்பர் ஸ்டராகவும் நடித்தால், அதை சீரியஸ் ஆக கருதும் மக்களும், ரசிகர்களும் தன்னை விட்டு விலகும் ஆபத்து இருக்கிறது என்று அஞ்சுகிறாராம். இந்த நேரத்தில் எந்திரன் கதையும் கிட்டதட்ட அதே தோரணையில் அமைந்திருப்பதுதான் ரஜினிக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மீண்டும் ஒரு படத்தில் சாதாரண தொழிலாளியாக நடித்துவிட்டு, அதன் பிறகு எந்திரனுக்கு போனால் என்ன என்று யோசிக்கிறாராம் ரஜினி. இந்த குழப்பத்தின் அடையாளமாக ஒரு சம்பவத்தையும் உதாரணம் காட்டுகிறார்கள் கோடம்பாக்கத்தில். இந்த வாரம் சுல்தான் தி வாரியர் படத்திற்காக பத்து நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார் ரஜினி. முதல் இரண்டு நாள் ஷ¨ட்டிங்கை எடுங்கள். கடைசி எட்டு நாள் படப்பிடிப்புக்கு நான் வந்து விடுவேன் என்று அனுப்பி வைத்தாராம் மகள் சௌந்தர்யாவை.

ஐதராபாத் போயிருந்த இந்த டீம், முதல் இரண்டு நாள் படப்பிடிப்பை முடித்துவிட்டு காத்திருந்தது. ஆனால், எந்திரன் குழப்பத்தால் சுல்தான் படப்பிடிப்பில் ஆர்வம் காட்டாத ரஜினி, படப்பிடிப்புக்கு போகவே இல்லை. காத்திருந்த யூனிட், தனது படப்பிடிப்பை கேன்சல் செய்துவிட்டு சென்னை திரும்பிவிட்டது.
இதற்கிடையில் குசேலன் பட விவகாரத்தில் போர்க்கொடி தூக்கியிருக்கும் தியேட்டர் அதிபர்களும், விநியோகஸ்தர்களும் மீண்டும் குரல் கொடுத்திருக்கிறார்கள். ரஜினி யோசித்திருக்கும் இந்த புதிய படம், குறைந்த செலவில் எடுக்கப்பட்டு இந்த போர்க்கொடிக் காரர்களுக்கு வழங்கப்படுமாம். இதில் ஏழைப்பங்களானாக, சாதாரண தொழிலாளியாக ரஜினி நடிப்பார் என்பது மட்டும் இப்போதைக்கு உத்திரவாதம்!